26 Mar 2015

தமிழர்களின் வீர விளையாட்டுகள் - (ICLS-UNISEL)

உயிரையும் துச்சமாக மதித்து, சீறி வரும் காளைகளோடு மோதி அதை வெல்லும் போது கிடைக்கும் பெருமை, பாராட்டுக்களே, உயிருக்கு ஆபத்தான விளையாட்டாக இருந்தாலும் ஜல்லிக்கட்டி்ல பங்கேற்கும் ஆண்களின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. மாட்டுப் பொங்கலன்று ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டு கிராமங்களில் இன்றும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் புகழ்பெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு எப்போது தோன்றியது என்பது குறித்த தெளிவான தகவல் நம்மிடையே இல்லை. இருந்தாலும் ஆதி தமிழர்கள், தங்களது வீரத்தை நிரூபிக்க ஜல்லிக்கட்டைத்தான் முக்கிய களமாக கண்டிருக்கிறார்கள் என்பது உறுதியாக தெரிகிறது. மேலும் பெண்களை மணக்க விரும்புவோர், காளைகளை அடக்கி பரிசாக பெண்களைப் பெற்று மணமுடிப்பதும் அக்காலத்துத் தமிழர்களின் வழக்கமாக இருந்திருக்கிறது. ஜல்லிக்கட்டு விளையாட்டில் முரட்டுக் காளை மாடுகள் பல ஊர்களிலிருந்தும் அழைத்து வரப்படும். சிலர் காளைகளை ஜல்லிக்கட்டுக்கென்றே வளர்த்துப் பழக்கப்படுத்துவதும் உண்டு. காளைகள் மேள தாள சத்தங்களுக்கிடையே விளையாட்டுக்கென உள்ள மைதானத்தில் (கிரவுண்ட்) விரட்டி விடப்படும். மாட்டின் கழுத்தில் பணமுடிப்பு கட்டப்பட்டிருக்கும். மாட்டை அடக்கி பிடிக்கும் இளைஞர்கள் அந்த பண முடிப்பை எடுத்துக் கொள்ளலாம். சில சமயம் மாட்டின் கழுத்தில் பண முடிப்புடன் தங்கச் சங்கிலியும் கட்டப்பட்டிருக்கும். மாட்டின் உரிமையாளரின் வசதிக்கேற்ற பரிசுப் பொருட்களும் விதம் விதமாக இருக்கும். இப்போது டிவி, மிக்சி, கிரைண்டர் என்று மாடர்னாகவும் பரிசுகளைக் கொடுத்து அசத்துகிறார்கள். மாட்டை கோபப்படுத்தவதற்கென்று தாரை, தப்பட்டைகள் முழக்கப்படும். வாத்திய ஓசைகளை கேட்டு காளைகள் மூர்க்கமாக ஓடத் துவங்கும். காளையை அடக்குவதெற்கென்று பல இளைஞர்கள் போட்டி போடுவர். இந்த வீர விளையாட்டின் போது காளைகள் முட்டி பலர் படுகாயமடைவதும், சிலர் இறப்பதும் சகஜமானது.





ICLS-UNISEL
(INDIAN CULTURAL AND LANGUAGE SOCIETY)